முன்னாள் போராளிகளுக்கான கடன் திட்டங்களை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது!

280 0

972983372untitled-1இன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மக்களால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இதன்படி, யுத்த முடிவுக்கு பின்னர் வடக்கில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன, முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட தொழில் கடன்களும் நிறுத்தப்பட்டுவிட்டன, இவற்றை கருத்தில் கொண்டு பொது எதிரணியாக இப் பிரச்சினைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கைகளை வருங்காலத்தில் எடுக்க தீர்மானித்துள்ளீர்கள்? என, வினோத் பாலச்சந்திரன் என்பவர் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த நாமல், “வடக்கில் நிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் கட்டாயமாக மீண்டும் தொடங்கப்பட வேண்டும். முக்கியமாக முன்னாள் போராளிகளுக்கான கடன் திட்டங்களை இவ் அரசாங்கம் நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. நாம் ஆட்சிப்பீடம் ஏறியதும் நிறுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களிற்கான அனைத்து செயல்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், “இந்த நல்லாட்சி அரசாங்கம் மீது வெறுப்புற்று வருகின்ற வேலையில் பலமான ஓர் எதிர்கட்சி இல்லாத காரணத்தால் பல அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அரசை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். இவ்வாறான ஓர் தருணத்தில் உங்கள் தந்தை தலைமையிலான அணியினரின் செயற்பாடு எவ்வாறு அமையும்”என முஹமட் பாயிஸ் என்பவர் கேட்டிருந்தார்.

இதற்கு, “பிரதான எதிர்க்கட்சியினரான தமிழ் அரசு கட்சியினர், நாட்டு பிரச்சினைக்கும் குரல் கொடுப்பது இல்லை, தமிழர் பிரச்சினைக்கும் குரல் கொடுப்பதில்லை, அவர்கள் அரசாங்கத்திற்கு பந்தம் பிடிப்பதிலேயே குறியாக உள்ளனர். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் அனைத்து சமூகத்தினருக்குமான உண்மையான நல்லாட்சி உருவாகும்..” என நாமல் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்தும், ஆஷினி அல்விஸ் என்பவர், “சகோதரரே நீங்கள் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா, அவை பொய்யாயின் ஏன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என வினவியிருந்தார்.

அதற்கு, “அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசியல் இலாபங்களுக்காக முன்வைக்கப்பட்டவை, இவை அரசாங்கத்தால் அதன் பலம் மற்றும் அரச ஊடகங்களை பயன்படுத்தி பரப்பப்பட்ட எந்தவொரு அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுக்கள், இது குறித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை நான் தற்போது மேற்கொண்டுள்ளேன். மிக விரைவில் நான் நிரபராதி என நீதிமன்றம் மற்றும் ஏனைய சட்ட நிறுவனங்களில் நிரூபனமாகும்.”எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “உங்கள் தந்தையாரும் கூட பெரும்பாலான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனாவிடமே கடன்களைப் பெற்றிருந்தார், ஆனால் உங்கள் தரப்பினர் தற்போது ஏன் பிரச்சினைகளை உருவாக்குகின்றீர்கள்” என ஹசன் குசைன் என்பவர் வினவியதற்கு, “உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடன்களைப் பெறுவது மற்றும் நாட்டின் உடமைகளை விற்பது என்பன இருவேறுபட்ட வித்தியாசமான விடயங்கள் என நாமல் பதிலளித்துள்ளார்.

குறித்த பதிலுக்கு மீண்டும் தனது கருத்துக்களை பதிவு செய்த ஹசன் குசைன், “இந்த அரசாங்கம் எதனையும் விற்கவில்லை மாறாக வறுவாய் ஈட்டவே முற்படுகிறது எனவும், இது உங்கள் தந்தையாரின் அரசாங்கம் செய்தது போன்ற 99 வருட குத்தகை மட்டுமே, உதாரணமாக போட்சிட்டி ஒப்பந்தம்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரிதொரு நபரின் கேள்விக்கு பதிலளித்திருந்த நாமல், நாட்டை விற்பது அல்லது அராஜகத்தை மேற்கொள்வதை நிறுத்துவது என்பது மக்களால் மட்டுமே முடியும். நாம் இணைந்து கட்டியெழுப்பியுள்ளது மாபெரும் மக்கள் பலம், நாட்டினுல் இடம்பெறும் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்ந்தும் இரகசியம் அல்ல. பொருளாதாரத்தை மிகவும் பயனற்ற முறையில் நிர்வகிப்பதோடு அரச சொத்துக்கள் மற்றும் பாரம்பரிய இடங்களையும் வௌிநாட்டுக்கு விற்க ஆரம்பித்துள்ளனர். நாம் நேற்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்வோம், என்றார்.

அத்துடன், நாமல் ராஜபக்ஷவின் அடுத்த தேர்தல் களம் குறித்து ஒருவர் வினவியிருந்த போது, “நாம் அடுத்த தேர்தலுக்காக பரந்த கூட்டணி ஒன்றை ஏற்படுத்துவோம், அதில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு பகுதியாக இருக்க முடியும்.. எனக் குறிப்பிட்டிருந்தார்.