பாமியான் புத்தர் சிலை இருந்த இடங்களை பாதுகாப்போம்: தலிபான்கள்

202 0

ஆப்கானிஸ்தானில் பாமியானில் புத்தர் சிலை இருந்த இடம் சேதப்படுத்தப்படாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாமியான் எனுமிடத்தில் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் இருந்தன. இந்தச் சிலைகளை கடந்த 2001 ஆம் ஆண்டு தலிபான்கள் வெடிவைத்து தகர்த்தனர். இப்போது அந்த இடத்தில் புத்தர் சிலை இருந்த மாடம் மட்டுமே உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில் புத்தர் சிலை இருந்த மாடமும் கூட சிதைக்கப்படக்கூடும் என அஞ்சப்பட்டது.

ஆனால், அந்த இடம் சிதைக்கப்படாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். பாமியானின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநரக தலைவர் சைஃப் உல் ரஹ்மான் முகமதி, அரியானா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாமியானில் இருந்த புத்தர் சிலைகள் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றை சல்சல், ஷமாம் என உள்ளூர்வாசிகள் அழைத்துவந்தனர். இந்த சிலைகள் 2001 மார்சில் தகர்க்கப்பட்டன.

இப்போது இந்த சிலைகள் இருந்த மாடத்தை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளேன். இந்த சிலை மாடங்கள் தகர்க்கப்படமாட்டாது. மாறாக நாட்டில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க இந்த தலம் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், 2001 மார்ச்சில் பாமியானில் சிலைகள் அழிக்கப்பட்டது ஏதும் அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவில்லை. இஸ்லாமிய சட்டத்தின்படியே ஆராய்ந்து அந்த முடிவை எடுத்தது என்றார்.

முன்னதாக ஹெராட் நகரின் தகவல் மற்றும் கலாச்சார துறை அதிகாரி ஜல்மாய் ஷஃபா கூறுகையில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் மட்டுமே நாட்டின் 40% கலாச்சார அடையாளங்கள் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாட்டின் பொருளாதாரம் அதற்கு இப்போதைக்கு இடம் கொடுக்கவில்லை. அரசாங்கத்தின் நிலைமை சீரானதும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

ஹெராட் மாகாணத்தில் 780 வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் ஹெராத் நகர மாளிகை, முஸல்லா காம்ப்ளக்ஸ், காவ்ஹர் ஷாத் சமாதி ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவை.