நாம் சவால்களுக்கு அச்சமடையும் அரசாங்கம் அல்ல – ரோஹித்த

223 0

நாம் சவால்களுக்கு அச்சமடையும் அரசாங்கம் அல்ல என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இறைவரி, நிதி கட்டளைகள் கீழ் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தச்சட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாம் சில கேள்விகளை அவரிடம் முன்வைக்க விரும்புகிறோம்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்காகத்தான் 19ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதாக கூறியது.

ஆனால் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மக்களால் புரிந்துக்கொள்ள முடியாது போயுள்ளதா அல்லது ஐக்கிய தேசிய கட்சியால் புரிந்துக்கொள்ள முடியாது போயுள்ளதா எனத் தெரியவில்லை. 19ஐ கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் தோல்வியையே தழுவியது.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 90 சதவீதமான உள்ளூராட்சிமன்றங்களை நாமே கைப்பற்றினோம்.

ஆகவே, நாங்கள் விலக்கிக்கொள்ளும் சட்டங்களை கொண்டுவரவில்லை. அவ்வாறான சட்டங்களை கொண்டுவரப்போவதும் இல்லை. அதனால்தான் மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர். நாம் சவால்களுக்கு அச்சமடையும் அரசாங்கம் அல்ல என்றார்.