ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 8 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான பாக்லானில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் வேலை பார்த்து விட்டு நேற்று முன்தினம் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.அவர்களை துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள், வழிமறித்து வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டு சரமாரியாக சுட்டுத்தள்ளிவிட்டு சிட்டாக பறந்து விட்டனர்.
இந்த கொடூர தாக்குதலில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.கொல்லப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் அங்குள்ள ஹசாரா என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் ஷியா பிரிவினர் ஆவார்கள்.
ஷியா பிரிவினரை சன்னி பிரிவினர் குறி வைத்து கொல்வது அங்கு வழக்கமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தாக்குதலை தலீபான்கள் நடத்தி உள்ளதாக தாக்குதல் நடந்த டலே வா பார்பாக் மாவட்டத்தின் கவர்னர் பைஸ் முகமது அமிரி கூறினார். ஆனால் தலீபான்கள் அதை மறுத்துள்ளனர்.