கன்னியாகுமரி கடலில் பொலிவிழந்து வரும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை

178 0

திருவள்ளுவர் சிலை மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது என்ற போதிலும் சிலை பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனையானது என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறைக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு பாறையில் வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த 1996-ம் ஆண்டு இந்த சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி, அம்பாச முத்திரம், சென்னை சோளிங்கநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் தனித்தனி பாகங்களாக இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.

இந்த சிலை அமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இந்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

கடல்மட்டத்தில் இருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 7ஆயிரம் டன் எடை கொண்ட இந்த சிலை 3 ஆயிரத்து 681 தனித்தனி கற்களால் உருவாக்கப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம் அரசு சிற்ப கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் கணபதி ஸ்தபதி இந்த சிலையை செதுக்கி நிறுவினார்.

திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக்கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது.

திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் உயரம் 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலை 150 சிற்பக்கலைஞர்கள் மூலம் தினம் 16 மணி நேரம் 4 ஆண்டுகள் தொடர் உழைப்பின் மூலம் உருவானது.

இந்த சிலையின் அமைப்பு பணியையும் முன்னேற்றத்தையும் அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தினம் தினம் கவனித்து அவரது தனிப்பட்ட மேற்பார்வையில் சிலை அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது ரூ.6 கோடியே 11லட்சம் செலவில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய கல்லால் ஆன சிலை உலகிலேயே வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சிலையை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினசரி கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

அவர்கள் சிலையின் அழகை கண்டு மெய் சிலிர்க்கும் நிலை உள்ளது. கடலில் இப்படி ஒரு சிலை எப்படி அமைக்கப்பட்டது என்று அவர்கள் வியந்து பார்க்கிறார்கள். கடல் உப்புக்காற்றின் பாதிப்பு இல்லாமல் இந்த சிலை பொலிவுடன் திகழ 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை “பாலி சிலிகான்” எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்ட வேண்டும்.

அப்போதுதான் சிலை பொலிவுடன் காணப்படும் என்று சிலையை வடிவமைத்த டாக்டர் கணபதி ஸ்தபதி அறிவுரை வழங்கினார். அதன்படி கடல் உப்புக்காற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சிலையை சீரமைத்து ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

கடந்த 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த சிலை 2004, 2008, 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்பட்டது. இதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ரசாயன கலவை இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த சிலை ரசாயன கலவை பூசி சீரமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

கன்னியாகுமரி கடலில் உள்ள உப்புக்காற்று காரணமாகவும் அடிக்கடி கடலில் எழும் அலையின் சீற்றம் காரணமாகவும் திருவள்ளுவர் சிலையின் மேல்உப்பு படிந்து வருகிறது.

இதனால் திருவள்ளுவர் சிலையின் மெருகு குறைந்து சிலை மோசமாகி வருகிறது. இந்த சிலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூசப்படும் ரசாயன கலவை 4 ஆண்டுகள் முடிந்த பிறகும் இதுவரை பூசப்படவில்லை.
 சிலை மண்டபத்தில் கடல் உப்பு காற்றினால் உப்புத்தன்மை படிந்துள்ளதை காணலாம்

இதனால் திருவள்ளுவர் சிலை கடல் உப்புக்காற்றில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக பொலிவிழந்து காட்சி அளிக்கிறது.

சிலையில் ஆங்காங்கே நீர் கசிவுகள் ஏற்பட்டு சிலை மற்றும் மண்டபத்தில் வெள்ளை நிறத்திட்டுகள் ஆங்காங்கே படிந்து உள்ளன. மண்டபத்தின் உள் பகுதியில் மழைநீர் மற்றும் கடல் உப்பு நீரின் கசிவு ஏற்பட்டு மண்டபத்தின் உள் பகுதி ஈர தன்மையுடன் காணப்படுகிறது.

இந்த ஈரத்தன்மையுடன் கூடிய பாதையில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும்போது கால் தவறி கீழே விழும் பரிதாப நிலையும் ஏற்பட்டு உள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு இது 60 முதல் ரூ.80 லட்சம் ரூபாய்க்கு மேல் திருவள்ளுவர் சிலை மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது என்ற போதிலும் இந்த சிலை பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனையானது என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிலை புனரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரிகள் இணைய வழியாக பல கூட்டத்தை நடத்தி இதுகுறித்து விவாதித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் சிலையை சீரமைக்கவும் ரசாயன கலவை பூசவும் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது என்றும் இதற்கிடையில் அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்ய உள்ளனர் என்றும் இதனைத்தொடர்ந்து சிலை புனரமைப்பு பணி தொடங்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.