ஐவரி கோஸ்ட்: சம்பள உயர்வுக்காக ராணுவ மந்திரியை சிறைபிடித்த வீரர்கள்

263 0

201701081103340579_mutinous-soldiers-free-ivory-coast-defence-minister_secvpfகொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டு ராணுவ மந்திரி சம்பள உயர்வு மற்றும் போனஸ் கேட்டு வீரர்களால் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்காப்பிரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் காலணி ஆதிக்கத்தின்கீழ் இருந்துவரும் சிறிய நாடான ஐவரி கோஸ்ட் கொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் உள்ள நாடாகும்.

இந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகளும், வீரர்களும் சம்பள உயர்வு, வீட்டு வசதி, போனஸ், பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.குறிப்பாக, முன்னர் ஆயுதமேந்திய போராளிக் குழுவாக இயங்கி வந்து பின்னர் அரசிடம் சரணடைந்து, ராணுவத்தில் சேர்ந்த ஒருபிரிவினர், மிக தீவிரவமாக தங்களது போராட்டத்தை வழிநடத்தி வந்தனர்.

ஆனால், இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் நாட்டின் இரண்டாவது பெரிய முக்கிய நகரமான புவாக்கே நகரில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்கை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சூறையாடிய போராட்டக்காரரகள், அங்கிருந்த சிறியரக ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளை அள்ளிச் சென்றனர்.

புவாக்கேவில் மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் ராக்கெட்டுகளை ஏவியும், அரசு அலுவலகங்களுக்கு முன்னால் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் மக்களை கதிகலங்க வைத்தனர்.ஐவரி கோஸ்ட்டின் பொருளாதார தலைநகரமான அபிட்ஜான் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் நேற்று கலகத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டிருந்தன.

சாலை போக்குவரத்து ஸ்தம்பித்து, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, எங்கு பார்த்தாலும் மக்களின் முகங்களில் அச்சமும் பீதியும் காணப்பட்டது.இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீர்ர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐவரி கோஸ்ட் அதிபர் அலாசனே ஒவாட்டாரா உத்தரவின் பேரில் அந்நாட்டின் ராணுவ மந்திரி அலைன் ரிச்சர்ட் டான்வாஹி, தலைநகர் யாமோவ்சோக்ரோவில் இருந்து நேற்று புவாக்கே நகருக்கு வந்தார்.

அங்குள்ள ராணுவ தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அவர் காத்திருந்தபோது உள்ளே புகுந்த ராணுவ வீரர்கள், அலைன் ரிச்சர்ட் டான்வாஹி மற்றும் அவருடன் வந்திருந்த தலைமை அதிகாரிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் நாட்டு மக்களிடையே பதற்றம் மேலும் அதிகரித்தது. சுமார் இரண்டு மணிநேர சிறைபிடிப்புக்கு பின்னர் மந்திரியை போராட்டக்காரர்கள் விடுவித்தனர்.உடனடியாக, கார் மூலம் விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட அலைன் ரிச்சர்ட் டான்வாஹி, அங்கிருந்து விமானம் மூலம் தலைநகர் யாமோவ்சோக்ரோ-வை பத்திரமாக சென்றடைந்தார்.