மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடியவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான துவிச்சக்கர வண்டிகளும் கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையின் அடிப்படையில் ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒன்பது துவிச்சக்கர வண்டிகளும் நான்கு விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையின்போது குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன.
இதன்போதே குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பகுதி உட்பட பல பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி எம்.எம்.ஜி.ஏ.டீகஹவத்துற தெரிவித்துள்ளார்.குறித்த நபரால் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டி மற்றும் கையடக்க தொலைபேசிகளின் உரிமையாளர்கள் தங்களது உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் வந்து தமது சைக்கிள்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.