உள்நாட்டு பிரச்சினைகளில் சர்வதேசம் தலையிட முடியாது

263 0

002ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் வேறு எந்த நாடுகளோ, ஐக்கிய நாடுகள் சபை போன்ற வேறு எந்த சர்வதேச அமைப்புகளோ தலையிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், இன்று (சனிக்கிழமை) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘உள்நாட்டு மோதல்களின் போதான அனைத்து பிரச்சினைகளும், குறித்த நாட்டு மக்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தினாலேயே கையாளப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சட்டமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே வேறு எந்த நாடுகளோ, ஐக்கிய நாடுகள் சபை போன்ற வேறு எந்த சர்வதேச அமைப்புகளோ ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது.

எமது நாடு சிறந்த அமைப்பை கொண்டுள்ளது. இந்நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்பை அனைத்து சமூகத்தினரும், அனைத்து மதத்தவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எமது நீதிபதிகள் வழங்கும் தீர்வினை எமது எதிர்காலத்திலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

எனவே உள்நாட்டு போர்க் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்துவது அவசியமற்றதாகும். அது அபாயகரமானதும் ஆகும். அவர்கள் எமது நாட்டின் ஒற்றுமை குறித்தோ நல்லிணக்கம் குறித்தோ சிந்திக்கமாட்டார்கள். எனவே போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்தக் கூடாது என்ற தீர்மானத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’ என்றார்.