இறக்குமதியின் பின் அரிசிக்கான நிர்ணய விலை அறிவிக்கப்படும். – நிமல் லன்சா

363 0

நாட்டுக்கு தேவையான ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அரிசிக்கான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய அரிசி இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் தற்போதுள்ளதை விட குறைந்த விலைக்கு அரிசியை விநியோகிக்க முடியும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

வத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மதத் தலைவர்கள், கிராமிய மட்டத்திலான மக்கள் பிரதிநிதிகளின் யோசனைப் பெற்றுக் கொண்டு இம்முறை வரவு – செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிராம மட்டத்தில் வரவு – செலவு திட்டத்திற்கான யோசனைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் கிராமத்திற்கு எவ்வகையான அபிவிருத்திகள் தேவை என்பதை நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு கிராம மட்டத்தில் பெற்றுக் கொள்ளப்படும் யோசனைகளை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்து , அவர் அவை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவற்றை வரவு – செலவு திட்டத்தில் இணைப்பதே இதன் இலக்காகும்.

வரவு – செலவு திட்டத்திற்கான யோசனைகளை நேரடியாக கிராம மட்டத்தில் பெற்றுக்கொள்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

எந்தவொரு வரவு – செலவு திட்டமும் வெளியிடப்படுவதும் , இரத்து செய்யப்படுவதும் மக்களின் நலனுக்காகவே ஆகும். தற்போது தட்டுப்பாடின்றி மக்களுக்கு அரிசியை விநியோகிக்கக் கூடியதாகவுள்ளது. ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் தற்போதுள்ளதை விட குறைந்த விலைக்கு அரிசியை விநியோகிக்க முடியும்.

நாம் ஆட்சியை பொறுப்பேற்க முன்னர் நெல்லுக்கான கொள்வனவு விலை 30 – 35 ரூபாவாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது நெல்லுக்கான கொள்வனவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். மாபியா என்று கூறப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

காரணம் சகலரும் வர்தகர்களாவர். அவர்கள் தமது இலாபத்தை அதிகரித்துக் கொள்வதில் அவதானம் செலுத்துகின்றனர். அதே போன்று விவசாயிகள் தமது இலாபத்தை அதிகரிப்பதில் அவதானம் செலுத்துகின்றனர்.

யாரும் எதிர்பார்க்காதளவில் உலகளவில் கொவிட் தொற்று பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. அதனால் அரசாங்கத்தின் வருமானம் 3000 பில்லியனிலிருந்து 1200 பில்லியனாகக் குறைவடைந்துள்ளது.

எனினும் அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தையும் , ஓய்வூதிய கொடுப்பனவுகளையும் முழுமையாக வழங்கியுள்ளது.

தற்போது அந்த சவால் மிக்க நிலைமை மாற்றமடைந்துள்ளது. எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை அடைந்து கொள்ள முடியும். இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும் என்றார்