சட்டவிரோதமாக கரிம உரத்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

134 0

தாவர பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறி கரிம உரத்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் மாத்திரம் குறித்த கரிம உரங்கள் இறக்குமதி செய்யும் திட்டங்கள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பற்றீரியா உள்ளதாக அதன் மாதிரிகளில் இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து இது சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து மேற்கொள்ளப்படவிருந்த கரிம உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது.

1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவர பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கு அமைய வைக்கோல், மண், விதைகள் அல்லது தாவர பாகங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்குக் கடுமையான தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் நாட்டில் டொலர் பற்றாக்குறை காரணமாகப் பெரும் போகத்திற்கான உரத் தேவையைப் பூர்த்தி செய்துக்கொள்ள குறித்த ஒழுங்குவிதிகளை மீறி சில தரப்பினர் கரிம உரங்களை இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.