மதுரை பாப்பாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

167 0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பாப்பாபட்டி சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கிராம மக்கள் வரவேற்றனர். அங்கு கிராமசபை கூட்டத்துக்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்புறம் திரளான கிராம மக்கள் அமர்ந்திருந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

ஊராட்சி நிதி செலவினம், கொரோனா தடுப்பூசியின் அவசியம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பாப்பாபட்டி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், ஊட்டச்சத்து இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துதல், கிராம சுகாதார திட்டம், மின்சார சிக்கனம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

அதன் பிறகு முதல்வர் மதுரைக்கு வரும் வழியில் கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று கூட்டுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு 20 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பால் மாட்டு கடன் உதவிகள் வழங்கினார்.

பின்னர் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி மேலாடையை துறந்த இடத்துக்கு சென்றார். அங்கு காந்தி ஜெயந்தி தினமான இன்று காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்கள் மற்றும் அவர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது