ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணி போர்ச்சுகல்லில் தஞ்சம்

163 0

ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்ச்சுகல் அரசு அறிவித்துள்ள நிலையில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 15-ந்தேதி தலிபான் படையினர் முழுமையாக ஆட்சியை கைப்பற்றினார்கள்.
ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். அதில் விளையாட்டு போட்டிகள் நடக்கக்கூடாது என்பது முக்கியமானதாகும்.
மேலும் பெண்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்றும் தடை விதித்து இருந்தனர். அதை மீறுபவர்களுக்கு கொடூர தண்டனைகளையும் அவர்கள் வழங்கினார்கள்.
இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் அதைபோல கொடூர தண்டனைகளை வழங்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் காரணமாக பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கால்பந்து அணி பிரபலமாக செயல்பட்டு வந்தது. உயிருக்கு பயந்த அவர்களும் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் தற்போது போர்ச்சுகல் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
அந்த வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்ச்சுகல் அரசு அறிவித்துள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, “நாங்கள் இப்போது பாதுகாப்பாக உணர்கிறோம். சுதந்திர பறவையாக மாறி இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
இந்த அணியில் உள்ள 15 வயது பெண் சாரா கூறும்போது, “நாங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இருந்தால் தலிபான்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
கோப்புபடம்
நாங்கள் திறமையான கால்பந்து வீராங்கனைகளாக வரவேண்டும் என்பதே எங்களது கனவாக இருந்தது.ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இருந்து இருந்தால் எங்கள் கனவு தகர்ந்து இருக்கும். இப்போது போர்ச்சுகல் நாடு எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து இருப்பதால் நாங்கள் தொடர்ந்து விளையாடி எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம்.
உலகில் மிகச்சிறந்த வீராங்கனைகளாக மாறி என்றாவது ஒருநாள் எங்கள் நாட்டுக்கு செல்வோம்” என்று கூறினார்.