முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா காலமானார்

240 0

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அரசியலில் அவரது இடத்தை தக்க வைக்கும் வகையில் வீரபாண்டி ஆ.ராஜா செயல்பட்டு வந்தார்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ஆ.ராஜா (வயது58). இவர் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தார்.

இன்று காலை இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வீரபாண்டி ஆ.ராஜா இறந்தார். இன்று அவருக்கு பிறந்த நாளாகும்.

இதையொட்டி அவரது இல்லத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோன்று அவரது பிறந்த நாளையொட்டி சேலம் புதிய பஸ் நிலையம் குகை, அஸ்தம்பட்டி மற்றும் வீரபாண்டி, பூலாவரி, ராஜபாளையம், ஆட்டையாம்பட்டி, ஓமலூர், தீவட்டிப்பட்டி, ஆத்தூர், தம்மம்பட்டி உள்பட பகுதிகளில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் அவர் இறந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது,
இதுபற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆ.ராஜா வீட்டிற்கு வர தொடங்கினர். சேலம் மாவட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் விரைந்து வந்து வீரபாண்டி ஆ.ராஜாவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

வீரபாண்டி ஆ.ராஜா கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். மேலும் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அரசியலில் அவரது இடத்தை தக்க வைக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தார்.