மதுரை மாவட்டத்தில் விடிய விடிய மழை- அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

191 0

வைகை அணை நீர்மட்டம் 53.06 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1048 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் கண்மாய்கள், குளங்கள் நிரம்பி உள்ளன. பல்வேறு கண்மாய்கள் நிறைந்து மறுகால் சென்று வருகிறது. இதனிடையே விவசாய பணிகளுக்காக முல்லைப்பெரியாறு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர், சோழவந்தான், பனங்காடி, குலமங்கலம், பூதகுடி, கள்ளந்திரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் விவசாய பயிர்கள் சேதமடைந்தது.

மதுரை நகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மதுரை பல்வேறு பகுதிகளில் ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். கோசாகுளம், தபால்தந்திநகர் ஆணையூர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் சாலைகளிலும் தெருக்களிலும் சேறும், சகதியும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கண்மாய், குளங்கள் நிரம்பி வழிகின்றன இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி காலை வரை மொத்த அளவாக 109 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. சராசரியாக 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 127.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 686 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 53.06 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1048 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1669 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.