அரச வருமானத்தை உயர்த்த சிகரெட் வரியை அதிகரிக்க வேண்டும்

162 0

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது (ADIC)> எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிகரட் மீதான வரி அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வொன்றை நடத்தியது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் (25) உள்ள 331 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் 20 வயதிற்கும் மேற்பட்ட சனத்தொகை அளவை கருத்திற்கொண்டு ஆய்வின் மாதிரித் தொகை தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில் 3958 பேர் இவ் ஆய்வின் மாதிரியாக கணக்கிடப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

2021 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை, வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும், வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பாலினத்தவரிடமும் இருந்து தகவல்கள் பெறப்பட்டன.

இந்த ஆய்விற்காக 981 பெண்களிடமும் 2977 ஆண்களிடமும் தகவல்கள் பெறப்பட்டன.

ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுள், 21வீதமானோர் 20 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டோராகவும் 50 வீதமானோர் 25 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோராகவும், 29 வீதமானோர் 40 வயதிற்கும் அதிகமானோர் ஆவர்.

ஆய்வின்போது, ஆண்களின் புகைத்தல் பாவனை தொடர்பான தகவல்களை கேட்டறிந்தபோது அவர்களில், 31வீதமானோர் தற்போது புகைத்தலில் ஈடுபடுபவர்களாகவும், 26 வீதமானோர் புகைத்தல் பாவனையை நிறுத்தியவர்களாகவும் மற்றும் 43 வீதமானோர் எப்போதும் புகைத்தலில் ஈடுபடாதோர் ஆவர்.

அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்காக வரியை அதிகரிக்க நேரிட்டால் சிகரட், உணவுப்பொருட்கள், மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றுள் எதற்கு வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என வினவியபோது 91.5வீதமானோர் சிகரட்டிற்கு வரி அதிகரிக்கப்டுவதை விரும்புவதாக தெரிவித்திருந்தனர்.

அரசாங்கம் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிகளில் இருப்பதால், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக சிகரட் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்தால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா? என்பது தொர்பில் ஆய்விற்கு உட்படுத்தியோர்களிடம் வினவிய போது, 89.3வீதமானோர் ஏற்றுக்கொள்வோம் என பதில் அளித்திருந்தனர்.

இக்கேள்விக்கு பெண்களின் பதிலை மாத்திரம் பகுப்பாய்வு செய்தபோது 98.3 வீதமான பெண்கள் இம்முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தனர் .

சிகரட் வரியை அதிகரிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டோர் மத்தியில், அவ்வாறு சிகரட் வரியை அதிகரிக்க நேரிட்டால் ஒரு சிகரட்டிற்கான வரித்தொகை எந்தளவு தொகையால் அதிகரிக்கப்படவேண்டும் என்ற கருத்தை ஆராய்ந்தபோது, ஆய்விற்குட்படுத்தியோர்களில் சிகரட் ஒன்றிற்கான விலை ரூபா25 விடவும் அதிகமான தொகையால் உயர்த்தப்பட வேண்டும் என 59.1வீதமானோர் தெரிவித்திருந்தனர்.

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், அரசாங்கத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக சிகரட் மீதான வரியை அதிகரிக்க நேரிட்டால் அதற்கான ஆதரவை வழங்குவீர்களா? என்ற கேள்விக்கு, 88.4வீதமானோர் தமது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.

சிகரட் மீதான விலையை அதிகரிக்கும் போது சிகரட் பாவனை பலவீனப்படுத்தப்படுகிறதா? (குறைவடைகிறதா?) என்ற வினாவிற்கு 76.3வீதமானோர் சிகரட் மீது விலையேற்றம் இடம்பெற்றால் பாவனை குறைவடையும் என்பதால் அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.