இறைவன் சொத்து இறைவனுக்கே… தூசி அளவு கூட தவறு நடக்காது-அமைச்சர் சேகர்பாபு உறுதி

166 0

கொரோனாவை கட்டுப்படுத்தவே வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமாக சென்னையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள இடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நேற்று மீட்கப்பட்டு கோவில் வசம் கொண்டுவரப்பட்டது. அதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி எதிரில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்டு இடமும் கட்டிடமும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கட்டிடத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆய்வு மேற்கொள்ள தனியார் கட்டிட வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்கள் செலுத்த வேண்டியுள்ள ரூ.12 கோடி வாடகையை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரூ.1000 கோடி மதிப்புக்கு மேலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மேலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ள அதிகாரத்தின்படி அர்ச்சகர்களை நியமிக்க தக்கார்கள் மற்றும் இணை கமிஷனர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்துள்ள வழக்கைச் சந்திக்க தயாராக உள்ளோம்.

கொரோனாவை கட்டுப்படுத்தவே வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து கோவில்கள் மட்டும் மூடப்பட்டுள்ளன என்பது தவறான பிரசாரம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மூட்டை மூட்டையாக காணிக்கை நகைகளை கட்டி வைத்திருப்பதை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். பயன்பாட்டுக்கு இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டுள்ளோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதிகளின் மூலம் சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ, மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நகைகளை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்படும்.

உருக்கிய நகை மூலம் கிடைக்கும் வட்டி பணத்தை வைத்து கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். நகைகளை உருக்குவது, இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையிலான திட்டமே தவிர, தூசி அளவு கூட இதில் தவறு நடக்காது என அய்யப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், காஞ்சீபுரம் மண்டல இணை கமிஷனர் ஜெயராமன், உதவி கமிஷனர் ஜெயா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.