மக்களுக்கு நன்மை செய்ய முடியாத அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்

169 0

இலங்கையின் மிக முக்கிய துறைகளான விவசாயத்துறை, தேயிலைத்துறை உள்ளிட்ட துறைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உறம் இன்றி இன்று அவர்கள் பல்வேறு பிரிச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இரசாயன உரம் வரவழைத்தால் மக்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படுவதாக கூறி இன்று அரசாங்கம் இரசாயன உரத்தினை நிறுத்திவிட்டு சீனாவிலிருந்து பற்றீரியாக்களை இறக்குமதி செய்துள்ளது.

இது விவசாயத்துறைக்கு மாத்திரமின்றி மனித குளத்திற்கே அழிவினை ஏற்படுத்தக்கூடியன. அது மத்திரமின்றி இன்று வெளிநாட்டு கப்பல்களை வரவழைத்து அதில் எண்ணெய் கசிவினை ஏற்படுத்தி கடல் தொழில் ஈடுபடுபவர்களை பாதிக்கச் செய்துள்ளது. இந்த நாட்டுக்கு காலம் காலமாக அன்னிய செலவாணியினை ஈட்டித்தந்த தேயிலை துறையினையும் பாதிப்படைய செய்து வெளிநாட்டிலிருந்து ஒரு காலமும் இல்லாதவாறு தேயிலை இறக்குமதி செய்து எமது சிலோன் டீ என்ற நாமத்திற்கிருந்த நற்பெயரினையும் களங்கப்படுத்தியுள்ளது. ஆகவே மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிவந்த அரசாங்கம் மக்களுக்கும் பல்வேறு இன்னல்களையும் துரோகத்தினையும் செய்து அந்நிய நாடு ஒன்று கூட செய்யாத அளவுக்கு மக்களை துன்பப்படுத்தி வருகிறது. ஆகவே மக்களுக்கு நன்மை செய்ய முடியாத அரசாங்கம் உடனே முடிந்தவர்களுக்கு கொடுத்து விட்டு வீடு செல்ல வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி சொந்த நிதியில் தலவாக்கலை லோகி தோட்டத்தில் கூம்மூட் பிரிவுக்கு செல்லும் பிரதான வீதியில் நிர்மானிக்கப்படவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..

எமது நாட்டின் அடையாளங்கள் ஒவ்வொன்றும் படிப்படியாக அழிந்து கொண்டு வருகிறது. எமது நாட்டுக்கு பெருமை சேர்த்து வந்து அடையாளங்களாக பெருந்தோட்டத்துறையும் மீன்பிடித்துறையும் விவசாயத்துறையுமே காணப்பட்டன. அந்த வகையில் சிலோன் டீ ஊடாக எமது நாட்டிக்கு பெருமை தேடித்தந்தது. ஆனால் இந்த பெருந்தோட்டத்துறை படிப்படியாக அழிந்து கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் செயற்பாடாகும்.

பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப் போவதாக வர்த்தமானியில் அறிவித்தது. ஆனால் அந்த சம்பளம் தொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாமல் அவர்களின் வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களுக்கு 12 நாட்கள் மாத்திரம் தான் வேலை கிடைக்கிறது.

அதுவும் அவர்களால் பறிக்கப்படும் தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபா என்ற ரீதியில் தான் வழங்கப்படுகின்றது. ஆகவே இந்த சம்பளம் உயர்த்திய போது கூட நாளாந்தம் சம்பளம் ஆயிரம் ரூபா என்றால் மாதம் எவ்வளவு வழங்கப்படும் என கேட்டோம். தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைக்கப்படும் என்று கூறினோம். இன்று அது உண்மையாகி இருக்கிறது. நாங்கள் வெறுமனே மற்றவர்களை விமர்சனம் செய்வதும் குறைகூறுவதும் எமது நோக்கமல்ல யதார்த்தமான விடயங்களை தான் அன்று கூறினோம். இன்று அது உண்மையாகியுள்ளது. பெருந்தோட்டத்துறையில் தோட்ட துறைமார்களின் அராஜகம் அடாவடித்தனம் இன்று அதிகரித்துள்ளன. அதனால் பெருந்தோட்டத்துறைக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் பல்வேறு விதமான முறண்பாடுகளை தோன்றியிருக்கிறது. அதனால் பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாங்கள் இத்தனை காலம் பெருந்தோட்டத்துறையிலிருந்து தேயிலையின ஏற்றுமதி செய்தோம். இந்த அரசாங்கத்தின் விநோதமான செயல் ஆண்டாண்டு காலமாக போற்றி காப்பாற்றப்பட்ட தேயிலை துறை வரலாற்றில் முதல் தடைவையாக தேயிலை இறக்குமதி செய்ய இருக்கிறார்கள். அவ்வாறு இறக்குமதி செய்யும் தேயிலையில் கலப்படம் செய்து மீண்டும் ஏற்றுமதி செய்ய உள்ளார்கள். இது எமது நாட்டுக்கு ஒரு இழிவான செயலாகும். அத்தோடு தொழிலாளர்களையும் அவமானப்படுத்தும் செயல் என அவர் மேலும் தெரிவித்தார்.