சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு இனி இது கிடையாது- அதிரடி உத்தரவு

192 0

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சென்னையில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 ஆயிரத்து 467 பேர் பலியாகி விட்டனர்.

5 லட்சத்து 38 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து விட்ட நிலையில் 2 ஆயிரத்து 58 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. 180 முதல் 220 வரை தினசரி பாதிப்பு பதிவாகிறது.

இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் பதிவாவதற்கு மார்க்கெட்டுகளில் அதிகமாக கூடுதல், நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவையே காரணம். ஒரு தெருவில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருந்தால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தற்போது 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன.

கொரோனா பாதித்த பலர் வீட்டு தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் ஒரே வீட்டில் நான்கைந்து பேர் தொற்றுக்கு ஆளாகிறார்கள். மேலும் கொரோனா தொற்று இருந்தும் வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ்

அதன்படி கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தக் கூடாது. உடனே ஆஸ்பத்திரியில் சேர வேண்டும். 14 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

கட்டாயம் வீட்டு தனிமை வேண்டுவோரின் வீடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். தனியறை, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்த்து அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று கூறி உள்ளார்.