மழையினால் கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
குமரி மாவட்டத்தில் புயலால் நேற்று முன்தினம் மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து விடிய விடிய பெய்தது. இதனால் நாகர்கோவிலில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.
பழையாறு, குழித்துறை தாமிரபரணியாறு, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகள், வாய்க்கால்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் குமரி அணை, சபரி அணை, சோழன்திட்டை அணை போன்றவற்றில் மழை வெள்ளம் மறுகால் பாய்ந்தோடியது. நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 24 அடியை எட்டியுள்ளது.
மழையினால் கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அந்த தண்ணீர் செம்மண் கலந்த பழுப்பு நிறத்தில் இருந்தது. இதனால் அருவியின் முன்புறம் உள்ள கல்மண்டபத்தின் கீழ்பகுதியை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் வரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படாவிட்டாலும் அருவியின் மேல் பகுதியில் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று அதிக தண்ணீர் வரத்து இருந்ததின் காரணமாக படகுசவாரியும் நடைபெறவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள தாழ்வான குடியிருப்புகள் அனைத்திலும் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாகர்கோவில் தடிக்காரன்கோணம், அருமநல்லூர், பூதப்பாண்டி, திட்டுவிளை, குலசேகரம், அருமனை, கீரிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் வயல்கள், வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புகள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றில் மழைநீர் புகுந்து குளம்போல் காட்சி அளித்தது.
சிறமடம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நேற்று பெய்த மழையின் காரணமாக தரையோடு சாய்ந்தது. தெரிசனங்கோப்பில் இருந்து அருமநல்லூருக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழை வெள்ளம் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் தண்ணீர் வடியத் தொடங்கியது. இதனால் போக்குவரத்து சீரானது. ஆனாலும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள வயல்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 15.2, பெருஞ்சாணி அணை- 41.4, புத்தன் அணை- 40.8, சிற்றார்-1 அணை – 72.4, சிற்றார்- 2- அணை- 67, மாம்பழத்துறையாறு அணை- 117, முக்கடல் அணை- 65.7, பூதப்பாண்டி- 60.4, களியல்- 172 (17 செ.மீ.), கன்னிமார்- 75.4, கொட்டாரம்- 90.2, குழித்துறை- 151, மயிலாடி- 115, நாகர்கோவில்- 117.2, சுருளக்கோடு- 137, தக்கலை- 132, குளச்சல்- 26.4, இரணியல்- 32, பாலமோர்- 133.8, ஆரல்வாய்மொழி- 25, கோழிப்போர்விளை- 130 (13 செ.மீ.), குருந்தங்கோடு- 110.4, முள்ளங்கினாவிளை- 122, ஆனைக்கிடங்கு- 77 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.
இதில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 17 செ.மீ. அளவுக்கும், குறைந்தபட்சமாக பேச்சிப்பாறை அணைப்பகுதியில் 15.2 மி.மீ. அளவுக்கும் மழை பெய்திருந்தது. மழையினால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. நேற்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2572 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 227 கனஅடி தண்ணீர் பாசன மதகுகள் வழியாகவும், 3294 கன அடி தண்ணீர் உபரிநீர் மதகுகள் வழியாக உபரிநீராகவும் திறந்து விடப்பட்டது.