முதலாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

216 0

வர்த்தக நோக்கத்துடன் பரப்பப்பட்டு வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாராமல், இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தால் நேற்று (27) ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ஊடகக் கலந்துரையாடலில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒருசிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத அவ்வாறான தவறான கதைகளுக்கு ஏமாறாமல் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் நபர்களையும், அதேபோல் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு வீதம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கு, தடுப்பூசி காரணமாக அமைந்ததென ஹோமாகம மூன்றாம் நிலை கொவிட் 19 சிகிச்சை மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் எரங்க நாரங்கொட இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு, ஒருமாத காலத்தின் பின்னரே நோய் எதிர்ப்புச்சக்தி முழுமையாக ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

இந்த காலத்தை பூர்த்தி செய்யாவிட்டால் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் மோசமான நிலைமைக்கோ அல்லது உயிரிழப்போ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தடுப்பூசி வகைகளுக்கு ஏற்ப அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக, பொதுமக்கள் மத்தியில் காணப்படும் எண்ணங்கள் பொய்யானவை எனவும், உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ள 8 தடுப்பூசி வகைகளும் ஒரே சமமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாகவும் மருத்துவர் தெளிவுபடுத்திக் கூறினார்.

பைஸர் தடுப்பூசி 12 வயது தொடக்கம் 18 வயது வரையான பிள்ளைகளுக்கு மாத்திரமே வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எந்தவொரு தடுப்பூசியின் மூலமும் ஒரே சமமான நோய் எதிர்ப்பு சக்தியே கிடைக்கின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் 19 தடுப்பூசி 12 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் அங்கீகரிக்கவில்லை எனவும் விசேட நிபுணத்துவ மருத்துவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.