ராணுவ ஆட்சியை நிராகரிப்பதன் அடையாளமாக சில துறவிகள் பிச்சை பாத்திரங்களை தலைகீழாக எடுத்துச் சென்றனர்.
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களை ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் இதுவரை 1100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த பிறகு நாட்டின் பொருளாதாரம் முடங்கி உள்ளது.
இந்நிலையில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக புத்த துறவிகள் இன்று மாண்டலே நகரில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே 2007ல் ராணுவ ஆட்சிக்கு எதிராக துறவிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் 14ம் ஆண்டு நிறைவையொட்டி இப்போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஆங் சான் சூகியின் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என துறவிகள் முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ ஆட்சியை நிராகரிப்பதன் அடையாளமாக சில துறவிகள் பிச்சை பாத்திரங்களை தலைகீழாக எடுத்துச் சென்றனர்.
மியான்மரில்பொதுவாக துறவிகள் ஒரு உயர்ந்த தார்மீக பொறுப்பாளராக, சமூகங்களை ஒழுங்கமைக்கும் பணியை மேற்கொள்கின்றனர். சில சமயங்களில் ராணுவ ஆட்சிகளுக்கு எதிராக திரண்டுள்ளனர். ஆனால் தற்போதைய துறவிகளின் போராட்டமானது, அவர்களிடையே ஏற்பட்ட பிளவை அம்பலப்படுத்தியுள்ளது. சில முக்கிய மதகுருமார்கள் ராணுவ தளபதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குகின்றனர், மற்றவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.