ஏமனில் ராணுவம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல் – 144 பேர் பலி

181 0

ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய கூட்டுப்படைகள் இடையிலான சண்டையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 93 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஏமனின் தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி இந்த மாதத்துடன் 7 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மரிப் மற்றும் ஷப்வா நகரங்களில் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனால் அந்த நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மரிப் நகரில் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த சண்டை பல மணி நேரம் நீடித்தது. இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 93 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதேபோல், ராணுவ வீரர்கள் 51 பேர் பலியாகினர். இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்வதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.