தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளில், எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதுதவிர பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
அவ்வகையில், சி.பா.ஆதித்தனாரின் 117வது பிறந்தநாள் விழா, நாளை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழ் இதழியலின் முன்னோடியும், தமிழர் தந்தை என எல்லோராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு நாளை (27-9-2021) காலை 10 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாத பற்றுக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட சி.பா.ஆதித்தனாரின் அருமை பெருமைகளை போற்றும் வகையில் அவரின் பிறந்தநாளன்று அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.