அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் கைது

166 0

மெக்சிகோ வீரர்கள் 14 பேரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்தது. அவர்களிடம் ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்தில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பகுதி அமைந்துள்ளது. இதில் பல இடங்களில் சரியான தடுப்பு வேலிகள் கிடையாது.

இந்தநிலையில் அந்த பகுதிக்கு வந்த மெக்சிகோ வீரர்கள் 14 பேர் 2 வாகனங்களில் அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்க படையினர் விரைந்து வந்து 14 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எல்லை பகுதியில் இடம்தெரியாமல் தவறுதலாக அமெரிக்காவுக்குள் வந்துவிட்டதாக அவர்கள் கூறினார்கள்.

ஆனாலும் வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கருதி 14 பேரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்தது. அவர்களிடம் ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதற்குள் வி‌ஷயம் அறிந்து மெக்சிகோ உயர் ராணுவ அதிகாரிகளும் எல்லையில் திரண்டனர். அவர்கள் அமெரிக்காவிடம் 14 பேரையும் விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அமெரிக்க ராணுவத்தின் விசாரணையில் 14 பேரும் தவறுதலாக எல்லை தாண்டி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 13 வீரர்களை அமெரிக்கா விடுவித்தது. ஒரே ஒரு நபர் மட்டும் தடுத்து வைக்கப்பட்டார். அவர் தன்வசம் கஞ்சா வைத்திருந்தார். எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.