தமிழகத்தில் நேற்று வரை அரசு மருத்துவமனைகளின் சார்பில் 4 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்து 75 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு கொரோனா நோய் வந்தாலும் அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படாது என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் எல்லோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 28 நாட்கள் இடைவெளியிலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் 84 நாட்கள் இடைவெளியிலும் அடுத்த டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
தமிழகத்தில் இப்போது முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 56 சதவீதம் பேர் உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 17 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு தமிழக அரசு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் 12-ந் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
அதற்கு அடுத்த வாரம் (செப்டம்பர் 19-ந் தேதி) 2-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்து 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 16 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிறு) 3-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்காக 29 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து 1,600 முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இதற்காக காலை 7 மணி முதல் ஒவ்வொரு வார்டிலும் தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு தகவல் கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தனர். மாநகராட்சி, நகராட்சி சார்பிலும் வீடு, வீடாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் தடுப்பூசி போட அழைப்பு விடுத்தனர்.
இதேபோல் மாநகராட்சி வாகனங்கள் மூலமும் அறிவிப்புகள் செய்து தடுப்பூசி முகாமுக்கு பொது மக்களை வரவழைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதன் காரணமாக ஒவ்வொரு மையத்திலும் இன்று காலையில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். காலை 7 மணிக்கு தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்களில் தொடங்கியது.
பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
கிராம பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாவட்ட சுகாதார அதிகாரிகள், ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் தனிக்குழுக்களை அமைத்து இதுவரை தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர்.
தமிழகத்தில் நேற்று வரை அரசு மருத்துவமனைகளின் சார்பில் 4 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்து 75 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் சார்பில் 24 லட்சத்து 47 ஆயிரத்து 65 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 140 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 5 கோடி பேர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்ற நிலையை எய்திட இன்று 3-வது வாரமாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இன்றிரவு 7 மணி வரை சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும்.
இன்று தடுப்பூசி முகாம்களில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே பொது மக்கள் திங்கட்கிழமை தடுப்பூசி போட தடுப்பூசி முகாம்களுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மெகா தடுப்பூசி முகாமுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தடுப்பூசி போட வந்தவர்களிடம் போதிய வசதிகள் உள்ளதா? என்று கேட்டு அறிந்தார். அங்கிருந்த சுகாதார ஊழியர்களிடம் இதுவரை எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்? என்று விவரம் கேட்டார்.
அதன் பிறகு அங்கிருந்து வடசென்னைக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள தடுப்பூசி முகாம்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு சென்று பார்வையிட்டார்.