சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் சுமார் 3 ஆயிரம் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுபற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வேலைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
எழுத்து தேர்வு இன்று சென்னை பச்சையப்பா கல்லூரி மற்றும் அடையாறு சட்ட பல்கலைக்கழகம் ஆகிய 2 இடங்களில் நடந்தது.
இந்த தேர்வை எழுதுவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் நேற்று இரவு முதலே சென்னை வந்தனர்.
2 மையங்களிலும் சேர்த்து சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். அடிப்படை கல்வித்தகுதி பள்ளி இறுதி வகுப்புத்தான். ஆனால் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படித்தவர்கள் எல்லாம் இந்த தேர்வை எழுதினார்கள்.
பெண்களில் பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக தாய், கணவர், மாமனார், மாமியார் என்று யாராவது ஒரு உறவினர் உடன் வந்திருந்தனர்.
இதனால் தேர்வு மையங்களில் திருவிழா கூட்டம் போல் இன்று அதிகாலையிலேயே திரண்டிருந்தனர்.
மைதானத்தில் அவர்களை அமரவைத்து ஹால் டிக்கெட்டுகளை பரிசோதித்து ஒவ்வொருவராக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வெளியே காத்திருந்தவர்களின் கைக்குழந்தைகளை வைத்திருந்தவர்களில் பல குழந்தைகள் தாயை தேடி சிறிது நேரத்திலேயே அழத்தொடங்கியது. அந்த குழந்தைகளை சமாதானப்படுத்த தந்தை அல்லது உறவினர்கள் பெரும்பாடுபட்டனர்.