இறக்குமதியின்போது விதிக்கப்படும் வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

289 0

downloadஅரிசி இறக்குமதியின்போது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வரிக் குறைப்பு நேற்றிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு தொடர்பில் நேற்று மாலை நிதியமைச்சில் நடைபெற்ற அமைச்சரவையின் உபகுழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதியின்போது ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி 50 ரூபாவாலும்,  வற் வரி 15 சதவீதத்தாலும்,  துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி 7.5 சதவீதத்தாலும், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி 2 சதவீதத்தாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் வரிக்குறைப்பு அமுலுக்கு வந்துள்ளது.

சம்பா, நாடு, சிவப்பு அரிசிகளுக்கே குறித்த வரிக்குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.