மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை: நிதிநிறுவன அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் – ராமதாஸ்

187 0

தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளி விவசாயி மனோகரனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வேளாண் கடன் தவணையை செலுத்தத் தவறியதற்காக தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதைத் தாங்கிக் கொள்ள முடியாத மாற்றுத்திறனாளி விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வருமானம் இல்லாமல் வாடிய உழவரை தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியது கண்டிக்கத்தக்கதாகும்.

கடன் தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கும்படி அவர் விடுத்த வேண்டுகோளை தனியார் நிதி நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனியார் நிதி நிறுவனங்கள் அளிக்கும் நெருக்கடிகள், இழைக்கும் அவமானங்கள் காரணமாக இனியும் ஒரு உழவர் கூட தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் தனியார் நிதி நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி உழவர் மனோகரனின் தற்கொலைக்கு காரணமாக தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழக அரசு

தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளி விவசாயி மனோகரனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.