செந்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

190 0

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டது செந்துறை பகுதி அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணைப்பதிவாளராக ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இங்கு பணி மாறுதலாகி வந்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக குறைந்த அளவே பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சமீப காலமாக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தன.

அதன் அடிப்படையில் நேற்று மாலை திடீரென அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினர்.

பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை பூட்டினர். மேலும் மாலை நேரத்தில் பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் சார்பதிவாளர் ஸ்ரீராம் மற்றும் உதவியாளர் ஜோதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடவடிக்கைகளின் முழு விபரம், அதற்காக பெறப்பட்ட கட்டணம் உள்ளிட்டவை குறித்து நீண்ட நேரமாக விசாரணை நடத்தப்பட்டது.

அத்துடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் குறிப்பெடுத்துக் கொண்டனர். பின்னர் சார் பதிவாளர் ஸ்ரீராமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றும் விசாரணை நடத்தினர்.

மாலை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த இந்த திடீர் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.38 ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியது. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டது செந்துறை பகுதி அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.