மன்னார் மாவட்டத்தில் தென் கடலில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக கடலட்டை பிடிக்கும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தென் கடலில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு மன்னார் கடற்தொழில் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள போதும் கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் தென்கடல் பகுதியில் நீண்ட காலமாக இரவு நேரங்களில் மீனவர்கள் சுழியோடி கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் கடற்தொழில் திணைக்களத்திடம் அனுமதிப்பத்திரம் பெற்றே குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கடலட்டை பிடிக்கும் தொழிலானது ஒக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 7 மாதங்களில் மாத்திரமே மன்னார் தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் கடலுக்குச் சென்று சுழியோடி கடலட்டை பிடிக்கும் மீனவர்களை இரவு நேரத்தில் செல்ல அனுமதிக்காது பகல் நேரத்தில் குறித்த தொழிலை செய்ய கடற்படையினர் அனுமதிப்பதாகவும்
இதனால் இந்த தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.