வடகிழக்கு கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டியும், கராத்தே பயிற்சி முகாமும் இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு அரசடியில் உள்ள சோட்டக்கன் கராத்தே சங்க பாடசாலையில் இன்று காலை ஆரம்பமானது.
சர்வதேச கராத்தே சம்பியனும், உலக கராத்தே சங்கத்தின் தலைவருமான பவல் பொம்பலோஸ்ஹி மற்றும் பிரித்தானிய சோட்டாக்கன் கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்றுவிப்பாளர் எஸ்.கணேசலிங்கம் ஆகியோர் இந்த பயிற்சிகளை நடாத்துவதுடன், போட்டிகளையும் நடாத்துகின்றனர்.
இதன் ஆரம்ப நிகழ்வு, சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் பிரதான பயிற்சியாளர் கே.ரி.பிரகாஸ் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் திருமதி க.பத்மராஜா கலந்து கொண்டார்.
இதன்போது கராத்தே வீரர்களுக்கான பயிற்சிகளும் போட்டிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், இந்த பயிற்சி மற்றும் போட்டிகளில், வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கராத்தே சங்கங்களின் பயிற்சியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நாளை காலை மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் திறந்த கராத்தே போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், பிற்பகல் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.