யாழ்.நெடுந்தீவிற்கு இரகசிய விஜயம் செய்யவில்லை – பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம்

187 0

அண்மையில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்.நெடுந்தீவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் அதனை மறுத்திருக்கும் தூதரகம், நாளுக்குநாள் ஊடகப்பணியின் தரம் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் கவலை வெளியிட்டிருக்கின்றது.

அதேவேளை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் பற்றிய இந்த பொய்யான செய்தியில் சீனத்தூதுவரையும் உள்ளடக்கியிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் விமர்த்திருக்கின்றது.

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹமட் சாத் கட்டாக் கடந்த செவ்வாய்கிழமை (21 ஆம் திகதி) காலை 08.00 மணியளவில் அவரது குடும்பத்தினருடன் யாழ்.நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாக தமிழ்மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஏற்கனவே மண்டைதீவில் நட்சத்திர ஹோட்டலொன்றை நிர்மாணிக்கும் பணிகளை பாகிஸ்தான் முன்னெடுத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், உயர்ஸ்தானிகரின் இந்த இரகசிய யாழ் விஜயம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்திருப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை மேற்கோள்காட்டி பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடகப்பிரிவு அதிகாரி கல்சூம் குவைஸெர் ஜிலானி இன்று வெள்ளிக்கிழமை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

‘ஒரேநேரத்தில் இருவேறு இடங்களில் பிரசன்னமாகக்கூடியவகையில் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் கொண்டிருக்கும் சக்தியைக் கண்டறியக்கூடிய திறமையான தகவல்மூலங்களை இந்த ஊடகத்தின் நிருபர்கள் கொண்டிருக்கின்றார்கள்’ என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ள கல்சூம் ஜிலானி, பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரை சுட்டிக்காட்டி ‘ காலை 08.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்த உங்களால் அதேநாளில் 09.00 மணிக்கு கொழும்பை வந்தடையமுடியாது’ என்றும் தெரிவித்துள்ளார். அதாவது உயர்ஸ்தானிகர் 21 ஆம் திகதி காலை 08.00 மணியளவில் நெடுந்தீவில் இருந்ததாகக் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதேநாளில் காலை 09.00 மணிக்கு உயர்ஸ்தானிகர் கொழும்பில் இருந்தார் என்பதை ஜிலானி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை அவருடைய பதிவை மேற்கோள்காட்டி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘நாளுக்கு நாள் ஊடகப்பணியின் தரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது’ என்று விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி உயர்ஸ்தானிகரகத்தின் பதிவை சுட்டிக்காட்டி உயர்ஸ்தானிகர் முஹமட் சாத் கட்டாக் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருப்பதுடன், ‘என்னுடைய நாளாந்த வேலைகளுக்கு மத்தியிலும், சில ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது ஊடகப்பணியின் தரம் குறித்து ஆச்சரியமடைகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது அந்தப் பதிவிற்குக்கீழ் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக பின்னூட்டமொன்று வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பின்னூட்டப் பதிவில், ‘இந்தப் பொய்யான செய்தியில் அவர்கள் சீனத்தூதுவரையும் உள்ளடக்காமை கவலையளிக்கின்றது. மாறாக அவரையும் உள்ளடக்கியிருந்தால், அது இன்னமும் நன்றாக இருந்திருக்கும்’ என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது