அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92ஆவது பிறந்த தின அறக்கொடை நிகழ்வில்; சான்றோர் ஐவருக்கு சிவத்தழிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இன்று தெல்லிப்பழை துர்காதேவி ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சிவத்தழிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92வது பிறந்த நாள் அறக்கொடை விழாவில் சான்றோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், வைத்திய கலாநிதி சேனாதிராஜா ஆனந்தராஜா, பொன்னாலைப் பண்டிதர் பொ.தி.பொன்னம்பலவாணர், நாதஸ்வர வித்துவான் எம்.பி.பாலகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய ஆசிரியை பண்டிதை திருமதி.மகாதேவி பத்மநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பெண்கள் வைத்திய பிரிவிற்காக ஒரு இலட்சம் ரூபா நிதியும், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா நிதியும் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92வது பிறந்த தின அறக்கொடை நிதியத்தால் வழங்கப்பட்டன.
மேலும் தங்கம்மா அப்பாக்குட்டி அன்னையின் சிவத்தழிழ்ச்செல்வி கல்வி நிதியத்தினூடாக தென்மராட்சி வலயப் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் 2017இல் கல்வி கற்கும் கல்வியில் திறமையாக செயற்பட்டு முதன்மையானவர்களில் கல்வி செயற்பாடுகளுக்கான உதவிகள் தேவைப்படுகின்ற நூறு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணகுமாரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
அன்னை தங்கம்மா அப்பாக் குட்டியின் 92வது பிறந்த நாள் நிகழ்வுகள் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்றன.
இன்றைய தங்கம்மா அப்பாக் குட்டியின் 92வது பிறந்த நாள் அறக்கொடை விழா நிகழ்விற்கு கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் தம்பதியினர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி வி.ரி.சிவலிங்கமும் கலந்து கொண்டார்.