மதுரையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

148 0

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் 3-வது அலையின் அறிகுறியா? என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்த கொரோனா தாண்டவம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 78 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முதல் அலை மற்றும் 2-வது அலை காலங்களில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் முடங்கியது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா 2-வது அலை குறைந்து இருந்தது. இதனால் மதுரை கொரோனா பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் கொரோனாவின் பாதிப்பு கடந்த 5 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்த மாதம் கடந்த 23 நாட்களாக 414 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் இல்லாத போதும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மதுரை மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டு தற்போதைய நிலவரப்படி 246 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சி பகுதிகளை விட கிராமப்புறப் பகுதிகளில் தொற்று பரவும் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே 3-வது அலை மதுரை மாவட்டத்துக்குள் நுழையாமல் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பொதுமக்களும் கொரோனா பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் நோய் பரவல் குறித்த அச்சமின்றி சகஜமாக கூட்டமாக நிற்பது, முக கவசம் அணிவதை தவிர்ப்பது உள்ளிட்ட அசாதாரண போக்குகளையும் கடைபிடித்து வருகிறார்கள்.

எனவே 3-வது அலையில் இருந்து மதுரையை பாதுகாக்க அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை முழுமையாக தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்துள்ளது. இதுவரை சுமார் 15.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (26-ந் தேதி) 3-வது மெகா தடுப்பூசி முகாம்களை மதுரை மாவட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முகாமில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வீடுகளில் தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அக்டோபர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே மதுரையில் 3-வது அலைக்கு வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்பட தெரிவித்தனர்.

ஆனாலும் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.