மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பத்து இலட்சம் சரீரப் பிணையில் செல்ல அனுமதி

182 0

மட்டக்களப்பு மாநகர சபையால் ஆணையாளர் எம்.தயாபரனிற்கு கையளிக்கப்பட்டிருந்த பத்து வகையான அதிகாரங்களை மாநகரசபையின் மற்றுமொரு தீர்மானத்தின் மூலம் வேறு உத்தியோகத்தர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் குறித்த அதிகாரங்களை ஆணையாளர் தொடர்ந்தும் பயன்படுத்தியதனால், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனால் மாநகர ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாகாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை (Writ) வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் செய்யப்பட்ட சமர்ப்பணங்கள் அடிப்படையில் 01.04.2021ஆம் திகதி நீதிமன்றத்தினால் கட்டளையொன்று வழங்கப்பட்டிருந்தது. குறித்த கட்டளையில், பத்து வகையான அதிகாரங்களையும் மறு அறிவித்தல் வரை ஆணையாளர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மாநகர ஆணையாளர் பல சந்தர்ப்பங்களில் மீறுகின்ற விதத்தில் செயற்பட்டமையினால் இச்செயற்பாடானது நீதிமன்றத்தினை அவமதிப்பமாகத் தெரிவித்து மாநகர முதல்வரினால், ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது கடந்த மாதம் 19ஆம் திகதி ஆதரிப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாநகர முதல்வர் சார்ப்பில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி யு.எல்.அலி சக்கி, சட்டத்தரணிகளான ஏ.எல்.ஆஸாத் மற்றும் என்.கமலதாசன் ஆகியோரால் செய்யப்பட்ட சமர்ப்பணங்களின் அடிப்படையில் மாநகர ஆணையாளரை 13.09.2021ஆம் திகதி மன்றில் தோன்றுமாறு அழைப்பாணை அனுப்ப மாகாண மேல் நீதிமன்றம் கட்டளையாக்கிருந்தது.

குறித்த நீதிமன்ற அழைப்பாணையை மாநகர ஆணையாளரிடம் சேர்ப்பிப்பதற்காக நீதிமன்ற பிஸ்கால் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இதனால் குறித்த வழக்கானது கடந்த 15ஆம் திகதி அழைக்கப்பட்ட போது, மாநகர ஆணையாளரை 23.09.2021ஆம் திகதி மன்றில் தோன்றுமாறு பொலிஸாரூடாக மீண்டும் அழைப்பாணை அனுப்ப மேல் நீதிமன்றம் கட்டளையாக்கிருந்தது.

குறித்த வழக்கானது நேற்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாநகர முதல்வர் சார்ப்பில் சட்டத்தரணி ஏ.எல்.ஆஸாத் அவர்கள் தோன்றியிருந்ததுடன், ஆணையாளர் தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் தோன்றியிருந்தார். கௌரவ மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் அவர்களினால் பத்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு ஆணையாளர் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த வழக்கானது எதிர்வரும் 11.10.2021 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.