தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்காமை தமிழருக்கு செய்யும் துரோகம் : இரா.துரைரெட்னம்

334 0

jtrjstrpgதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றோம் என்பதற்காக பேரவைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கூட்டுறவு நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஒரு அமைப்பு சமூகம் சார்ந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் பேரவை வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொதுவான வேலைத்திட்டத்தை தாங்கி செயற்பட்டு வருகின்றது.

அரசியல் கட்சிகளின் கொள்கைகளை தாங்கி பேரவை இருப்பதன் காரணமாக அது ஈழமக்கள் புரட்சிகர முன்னணியோ அல்லது ஏனைய கட்சிகளோ இருக்கலாம். நல்ல கொள்கைகளை தாங்கி நிற்கின்ற தலைமைக்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை கையாள்கின்ற விதத்தில் வடக்கு, கிழக்கில் நடைமுறையிலுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் அப்பிரச்சினைகளை எடுத்தியம்புவதற்கும் தற்போதைக்கு பேரவை தலைமை தாங்குகின்றது.

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். நாங்கள் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காக வரும் 21ஆம் திகதி எழுக தமிழ் சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அதனடிப்படையில் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.

அந்தப் பிரச்சனைகளை தேசிய ரீதியாகவும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களை தலைமை தாங்குகின்ற அரசியற் கட்சிகளுக்கு இருக்கின்றது. அந்த வகையில் பேரவையுடன் இணைந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவை செலுத்தி பிரச்சினைகளை தேசிய ரீதியாகவும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொண்டுவரும் அடிப்படையில் நாங்கள் இதில் பங்குகொள்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலன்களையும் அடிப்படை உரிமைகளையும் தாங்கி நிற்கின்ற அமைப்பொன்றிற்கு ஆதரவை வழங்க வேண்டும என்ற அடிப்படையில் நாங்கள் பேரவைக்கு ஆதரவு வழங்குகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றோம் என்பதற்காக பேரவைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது பல கட்சிகள் இணைந்த ஒரு தலைமையாகும். அந்த கட்சி தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது. அது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது என்பதற்காக பேரவை முன்னெடுக்கக்கூடாது என்பது சட்டமல்ல. இரண்டுமே முன்னெடுத்தால் அதற்கு ஆதரவு வழங்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையில் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இல்லை.தமிழ் மக்கள் பேரவை என்பது ஒரு ஸ்தாபனம். தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் தலைமை தாங்கும் ஒரு அமைப்பு.

இரண்டு அமைப்புகளும் ஒரே கொள்கையுடன் இருப்பதன் காரணமாக முரண்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதனைப்பார்க்கின்ற பார்வைகளிலும் கையாளும் விதங்களிலும் முரண்பாடுகள் உள்ளன.இரு தரப்பினரும் அவற்றினை திருத்திக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.