அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் பரிசீலிப்பு

170 0

குடிவரவு மற்றும் குடியேற்ற திருத்த மசோதா மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக விசா காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீடிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சம்பந்தப்பட்ட திருத்த மசோதாவானது , அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மசோதா இரண்டாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய 1948 ஆம் ஆண்டின் எண் 20 குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 14 தற்போதைய விசா வழங்கும் காலத்தை 2 இலிருந்து 5 வருடங்களாக அதிகரிக்க திருத்தப்படும்.

மேலும், அமைச்சரின் ஒப்புதலுடன் விசா வழங்கப்படும் காலம் 5 வருடங்களில் இருந்து 10 வருடங்களாக அதிகரிக்கப்படும்.

இந்த திருத்தம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வணிகங்களில் முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான சூழலை வழங்குவது உட்பட பல சமூக பொருளாதார நன்மைகளை கொண்டு வரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரான சரத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.