நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என நாட்டின் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து சவால் விடுக்கப்படவில்லை எனவும், நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறைமை அவசியம் என்ற இந்த செயலணியின் கருத்து அநாவசியமானது என தெரிவித்துள்ள அவர் இந்த செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறும் நீதியை வழங்குமாறும் எவரும் பலவந்தப்படுத்த முடியாது எனவும் பலவந்தப்படுத்தல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் புலிகளினால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிங்கள முஸ்லிம் மக்களும் நீதி கோருவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலதா மாளிகை, அரந்தாலவை, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் ஸ்ரீ மஹாபோதி போன்றவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வெளிநாட்டு நீதவான்களை விசாரணைப் பொறிமுறையில் இணைத்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.