விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனி

464 0

மறுக்கப்பட்டுவரும் நீதியை தாமதமின்றி வழங்குமாறு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பல்லாயிரம்பேர் ஜெனிவாவில் ஒன்றுகூடிய நிகழ்வுகள் விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது என்பதையே பறைசாற்றுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு 6 .3 .2017 அன்று நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணி என்றும் இல்லாதவாறு இம்முறை முக்கியம் பெறுகின்றது.

சிறிலங்கா சனாதிபதி மற்றும் பிரதமரின் சம்பிரதாய வருகைகளும் அள்ளிவீசும் வாக்குறுதிகளும் தமது வாழ்வில் எதுவித மாறுதல்களையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதுடன், தமிழர்களுக்கான நீதி சர்வதேச சமூகத்தால் பிராந்திய நலன்களுக்குள் பலியிடப்படுவதனையும் உணர்ந்துகொண்டதனாலேயே எமது தாயக மக்கள் ஏழாண்டு மௌனம் கலைத்து ‘எழுக தமிழராய்’ பேரெழுச்சி கொண்டுள்ளார்கள்.

genf-2017-march

தம்மீதான இனப்படுகொலை குற்றத்தில் இருந்து தப்பிக்கும் ஒரே காரணத்திற்காக சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை மறுபேச்சின்றி நிறைவேற்றிவரும் சிறிலங்கா அரசின் நல்லிணக்கப் பொறிக்குள் தெரிந்தே விழுந்துகிடக்கும் அனைத்துலக நாடுகளின் சுயநலப்போக்கால் ஏற்பட்ட விரக்தி ஒருபக்கமும் தாயக அரசியல் தலைமைகளின் அடிபணிவு அரசியல் போன்ற முட்டுக்கட்டைகள் மறுபக்கமுமாக சூழ்ந்துகொண்ட இவ்வேளையில் ஜெனிவா பேரணி மற்றும் கிழக்கில் நடைபெறும் “எழுக தமிழ்” நிகழ்வு வரலாற்று முக்கியத்தை பெறுகின்றது .

‘இலட்சியத்தில் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது’ என்ற தேசியத் தலைவரின் சிந்தனைத் தடத்தில் களமும் புலமும் ஒன்றிணைந்து எமது தேசம் விடுதலை பெற்று எமது மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் வரை மாவீரர்களை மனதில் நிறுத்தி உறுதியோடு போராடுவோமாக.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி