சர்வதேச அளவில் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவரும், பதன்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, அவருக்கு பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.
சீனாவின் இந்த தடுப்பு நடவடிக்கை கடந்த 31-ந் தேதியுடன் காலாவதியாகி விட்ட நிலையில், மசூத் அசாருக்கு தடை கேட்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி சீனாவை தவிர பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள பிற நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், இதற்கான அனைத்து வழிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக பதன்கோட் தாக்குதல் வழக்கில் மசூத் அசார் மீது தேசிய புலானய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து, சீனா தனது பிடிவாதத்தை விலக்கிக்கொள்ளும் என இந்தியா எதிர்பார்த்தது. எனினும் அது இறங்கி வராததால், பயங்கரவாத எதிர்ப்பில் சீனா இரட்டை வேடம் போடுவதாக ஐ.நா.வில் இந்தியா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.