தமிழகத்தில், பருவமழைகள் பொய்த்துப் போனதால் அணை, ஏரி, குளங்கள் வறண்டன. இதன்காரணமாக, டெல்டா பகுதி மற்றும் திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, எள், மக்காச்சோளம், மஞ்சள் போன்ற பயிர்கள் கருகின. இந்த வேதனையை தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்தும் 122 விவசாயிகள் உயிரை இழந்துள்ளனர். இது, மேலும் 22 உயர்ந்து 144 ஆனது. புதுக்கோட்டையில் 2 பெண்கள்: புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் அருகே உள்ள தேக்காட்டூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). இவருக்கு சொந்தமான 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். கிணற்று தண்ணீரை கொண்டு சாகுபடி செய்திருந்தார். போதிய நீர் இல்லாததால் பயிர் கருக தொடங்கியது. இதுபற்றி, நேற்று காலை வீட்டில் குடும்பத்தினரிடம் கவலையுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மணமேல்குடி அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (65). இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற அவர், கருகிய பயிரை கண்டதும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதேபோல் மணமேல்குடி அடுத்த மாவிலங்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியய்யா (67). இவர், அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் நேற்று காலை பயிர்கள் கருகியதை பார்த்து, நெஞ்சை பிடித்தபடி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் நெஞ்சுவலியால் இறந்தார். பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா திருவாலந்துறை கிராமம் ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் கணேசன் (59). தனது நிலத்தில் கரும்பு, மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் கருகிய வேதனையில் நேற்றுமுன்தினம் வயலிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தர்மபுரி: தர்மபுரி அருகே மாரண்டஹள்ளி தாமனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில், 2 ஏக்கரில் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகத்தொடங்கின. வழக்கம்போல், நேற்று முன்தினம் நிலத்துக்கு சென்றபோது, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குன்னமலை நல்லப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (58). இவருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மரவள்ளி, சோளம் பயிரிட்டிருந்தார். இதற்காக, காவிரியாற்றில் இருந்து நீரேற்று பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கும். தற்போது நீர் வரத்து இல்லாததால் கால்வாய் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பயிர்கள் கருகியது. நேற்று முன்தினம் மாலை வயலில் வேலை பார்த்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலை ஊராட்சி 98 பேளூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செங்கோடன் (75). இவர் தனது வீட்டருகே 1.87 ஏக்கரில் மஞ்சள் மற்றும் கத்தரி பயிரிட்டுள்ளார். நேற்று காலை ேதாட்டத்துக்கு சென்ற செங்கோடன், பயிர்கள் கருகியிருப்பதை கண்டு கண்ணீர் வடித்துள்ளார். வீடு திரும்பியதும் நெஞ்சு வலியில் துடிதுடித்து உயிரிழந்தார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ஓலப்பாளையம் கருக்கன்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் தங்கவேல் (63). விவசாயி. இவர், கரியாக்கவுண்டன் வலசு பகுதியில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கீழ்பவானி பாசனத்தின்கீழ் உள்ள 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டிருந்தார். வறட்சி காரணமாக பயிர் கருகியது. இதேவேதனையில் நிலத்திலேயே நேற்று முன்தினம் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சி சூரிபாளையம் செம்மண்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (72). இவர், அப்பகுதியில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், 500 தென்னை மரங்கள் வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டாக 8 இடங்களில் போர்வெல் அமைத்துள்ளார். 1,500 அடி ஆழம் வரை போர்வெல் அமைத்தும் தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இல்லாததால் தென்னை கருகின. இந்த வேதனையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே வாகைத்தாவூரைசேர்ந்தவர் வேலு (75), விவசாயி. இவரது வேலு, தனக்கு சொந்தமான 9 ஏக்கர் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். இதற்காக கயத்தார் வங்கியில் நகைகளை அடகு வைத்து பணத்தை செலவு செய்தார். ஆனால், தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகின. இவர், நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்றபோது, கருகிய பயிரை கண்டு அழுதவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
கடலூரில் 2 பேர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சங்கர் (45). இவர் தனது நிலத்தில் சவுக்கை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தார். இப்பயிர்கள் கருகியதால், நேற்று தனது நிலத்தில் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு இறந்து கிடந்தார். அதேபோல் பண்ருட்டியை அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜகோபால்(60). இவர், கொய்யா சாகுபடி செய்திருந்தார். போதிய நீரின்றி விவசாயம் பொய்த்து போனதால், 30 அடி ஆழ கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை புதுப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேனவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பையா (65). இவர், அப்பகுதியில் உள்ள தனது 3 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். இவரது பயிர்களும் கருகின. இதனை கண்ட அதிர்ச்சியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், உறவினர்கள் அவரை தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை கருப்பையா உயிரிழந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே பதினெட்டாங்குடியை சேர்ந்த ராமு (47), நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் சந்தைபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (50), திருச்சி மாவட்டம் பெரியகொடுந்துறையை சேர்ந்த சின்னப்பன் (53), திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கருவேலி கிராமத்தை சேர்ந்தவர் மீராபாய் (55), வரம்பியம் மெயின்ரோட்டை சேர்ந்த சீனிவாசன் (63), மந்தைவெளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (78), புதுக்கோட்டை மாவட்டம் பகட்டுவான்பட்டியை சேர்ந்த கண்ணையன் (65), நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலக்குறிச்சியை சேர்ந்த மீனாட்சி (54), அரியலூர் மாவட்டம் விழுப்பனங்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தன் (78) ஆகியோரும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்தனர். நேற்று ஒரே நாளில் இறந்த 22 பேரையும் சேர்த்து, விவசாயிகள் உயிரிழப்பு எண்ணிக்கை 144 ஆனது.