2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் : தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை

305 0

அணைகள், ஏரிகள் வறண்டு வரும் நிலையில் 2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், குடிநீர் பிரச்னையை சமாளிக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக்கவும் யோசனை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதிக்கு பிறகு தொடங்கியது. ஆனாலும், ஆங்காங்கே லேசான மழை தான் பெய்தது. எதிர்பார்த்தப்படி தீவிரமடையவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பவானிசாகர் அணை, மேட்டூர், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, அமராவதி உட்பட 89 அணைகளும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம் உட்பட 14 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 39 ஆயிரம் ஏரி, குளங்களில் 90 சதவீத ஏரி, குளங்களில் கால்பங்கு நீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால், தமிழகத்தில் பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 194 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் வெறும் 24 டிஎம்சி மட்டுமே உள்ளது. இந்த நீரை கொண்டு தமிழகத்தில் 2 மாதம்கூட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. இதனால், இப்போது முதலே பெரும்பாலான பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க வாரியத்திற்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், பிப்ரவரிக்கு பிறகு அணை மொத்தமாக வறண்டு விடும் என்பதால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தமிழக அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை ஆலோசிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் பொறியாளர்கள் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் தமிழகத்தில் 2 மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழகம் முழுவதும் 900 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம்  குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் இந்தாண்டு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் பஞ்சம் இன்னும் இரண்டு மாதத்தில் வர வாய்ப்புள்ளது. எனவே, இப்பிரச்னையை ஓரளவு சமாளிக்க 900 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக்கலாம் என அறிக்கை அளித்துள்ளோம். பொதுமக்களிடம் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் கூறியுள்ளோம். அரசு ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும். வரும் ஜனவரி 15ம் தேதி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மழையின் மூலம் பெரிய அளவில் அணைகள், ஏரிகளில் நீர் மட்டம் உயரும் என்று எதிர்பார்க்க முடியாது’ என்றார்.