வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகை

308 0

தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு நிவாரணமே கிடைக்கவில்லை என சரமாரியாக குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர்கள் அங்கிருந்து காரில் பறந்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டன. இதன் காரணமாக, பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் வெயிலில் கருகி வீணாகி வருகின்றன.

பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் தங்கள் கண்முன்னே பயிர்கள் கருகும் நிலையை பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தனர். மேலும், மனவேதனையில் தற்கொலையும் செய்து கொள்ளும் சோகமும் தொடர்கிறது.

இதுவரை டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 138 விவசாயிகள் பலியாகி உள்ளனர். விவசாயிகளின் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதித்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

நாகை  மாவட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன்,  கலெக்டர் பழனிசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். கீழையூர் ஒன்றியம்  சீராவட்டம் பாலம் அருகே திருவாய்மூர் என்ற இடத்தில் விவசாய சங்க  நிர்வாகிகளும், விவசாயிகளும் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த குழுவினர்  வயலை பார்த்து விட்டு காரில் ஏறினர்.

உடனே விவசாயிகள் காரை முற்றுகையிட்டு, `விவசாயிகளுக்கு உதவுவதாக அரசு விளம்பரம்தான் செய்கிறது.  ஆனால் உழவு மானியம், களைக்கொல்லி மானியம் எதுவும் கிடைக்கவில்லை’’ என்றனர்.  உடனே அமைச்சர் ஓ.எஸ்.மணியன், `மனு கொடுங்கள்’ என்றார். வேளாண்  அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம் என்று விவசாயிகள்  தெரிவித்தனர்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கும் என்று கூறிக்கொண்டே அமைச்சர் காரில் பறந்தார். திருச்சி:  திருச்சி  மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அரசு  செயலாளர்  ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி, கலெக்டர் பழனிச்சாமி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும்  வேளாண்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட கீழகள்ளக்குடியில் பார்வையிட வந்த அமைச்சர்கள் குழுவினரை  பெண் விவசாயிகள்  முற்றுகையிட்டு, கையில் வைத்திருந்த கருகிய சம்பா  பயிர்களை காட்டினர். மேலும், `மழையையும், வாய்க்கால் தண்ணீரையும் நம்பி  சாகுபடி செய்திருந்த சம்பா நெற்  பயிர் முழுவதும் கருகி விட்டது.

பெண்கள்  மற்றும் குழந்தைகளின் நகைகளை அடகு  வைத்து சாகுபடி செய்தோம்.  100 நாள்  வேலையும்  இல்லாததால் அடமானம் வைத்த நகைகளையும் திருப்ப முடியாமல் மன  உளைச்சலுக்கு  ஆளாகியுள்ளோம். எனவே, நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று  ஆவேசத்துடன் கூறினர். திருப்பத்தூர்: திருப்பத்தூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் ஒன்றியம் சோமலவரம் பகுதியில்,  வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர்  கபில் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் சபிதா, கலெக்டர் ராமன் ஆகியோர்  பார்வையிட்டனர். இவர்களை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டனர்.

அப்போது,  `திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.நல்லதம்பியை (திமுக) ஏன் வறட்சி  பகுதிகளை பார்வையிட அழைத்து வரவில்லை. அவர், எம்எல்ஏ பதவியில் இல்லையா?’’  என்று கேட்டதுடன், `நிலங்களை பார்வையிட வேண்டாம். இங்கிருந்து  செல்லுங்கள்’’ எனக் கூறினார்கள். இதனால், வறட்சி பகுதிகளை பார்வையிட வந்த  அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் பதில் கூறமுடியாமல் தவித்தனர். பின்னர்  அமைச்சர் கே.சி.வீரமணி, “உங்கள் எம்.எல்.ஏ. நல்லதம்பியிடம் நான்  பேசுகிறேன்’’ என கூறிவிட்டு ஆய்வு செய்யாமலேயே அங்கிருந்து கிளம்பினார்.

திருவள்ளூர்: மீஞ்சூர் பகுதியில் வறட்சியால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு கண்காணிப்பு குழு அலுவலர் பிரபாகர் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை 10 மணிக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். இவர்களுடன் திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், பொன்னேரி தாசில்தார் செந்தில்நாதன்,  மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர், திருப்பாலைவனம் தொட்டிமேடு, சிறுளப்பாக்கம், அண்ணாமலைச்சேரி, சேலியம்பேடு, ஈஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, ஆய்வை முடித்துவிட்டு மதியம் 1.30 மணியளவில் மீஞ்சூர் ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி வழியாக அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் காரில் கும்மிடிப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பூங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பூங்குளம், சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு ஆகிய கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் மீனவர்கள் அமைச்சர்களின் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர்.

வர்தா புயலால் எங்கள் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படகுகள் சேதமடைந்துள்ளது. இதுவரைக்கும் யாரும் வந்து நிவாரண உதவி தரவில்லை’’ என்று சரமாரியாக கேள்வி கேட்டு அமைச்சர்களை கண்டித்து கோஷமிட்டனர். ஆனாலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் காரைவிட்டு கீழே இறங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் மற்றும் மீனவர்கள், ‘‘காரைவிட்டு கீழே இறங்கி வந்து பதில் சொன்னால்தான் நாங்கள் இங்கிருந்து உங்களை விடுவோம்’’ என்றனர்.

இதையடுத்து கலெக்டர் சுந்தரவல்லி மட்டும் காரைவிட்டு கீழே இறங்கி வந்து, அதிமுகவினர் மற்றும் மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ‘‘உங்களின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். தற்போது வழி விடுங்கள்’’ என்றார். ஆனாலும், கலெக்டரின் வாக்குறுதியை ஏற்காத மக்கள், ‘‘எப்போது நிறைவேற்றுவீர்கள் என சொல்லுங்கள்’’ என்று கேட்டனர். அதற்கு கலெக்டர், ‘‘விரைவில் நிறைவேற்றுவோம்’’ என கூறி அமைச்சர்களுடன் காரில் பறந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயிர்கள் கருகியதால் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 2 விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இயற்கை மரணம் தான்’ : அமைச்சர்கள் பேச்சு; விவசாயிகள் கொதிப்பு

திருச்சி மாவட்டத்தில் வயல் பகுதிகளை பார்வையிட்ட பின் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறும்போது, `திருச்சி மாவட்டத்தில் வறட்சியால் 5 விவசாயிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு கவனத்துக்கு இதுவரை கொண்டு வரப்படவில்லை’’ என்று கூறினார். கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் விவசாயிகள் இறந்ததாக கூறுவது பொய்யான, தவறான தகவல். அது உண்மையான தகவல் இல்லை.

வயது முதிர்வின் காரணமாகவும், இயற்கையாக பல்வேறு நோய், உடல் உபாதைகளுக்கு உட்பட்டு இறந்துள்ளனர். வறட்சி காரணமாக இறந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் பரப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகளின் மரணம் குறித்த அமைச்சர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், இருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

* தமிழகத்தின் அனைத்து அணை, ஏரிகள், குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன.
* சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் குறைந்த நீர் மட்டமே உள்ளன.
* இந்த ஆண்டு கோடையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை தமிழகம் சந்திக்கும் அபாயம் உள்ளது.