வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 10 கைதிகள் குழுவினர் தம்மை விடுவிக்கக் கோரி சிறை கூரையின் மீது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறினார்.
மரண தண்டனைக் கைதிகளும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினருக்கு மன்னிப்பு வழங்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிய வந்ததையடுத்து இப் போராட்டம் ஆரம்பமானதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தமிழ்க் கைதிகளின் குழுவினருக்கு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர்களின் புனர் வாழ்வு மற்றும் சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.