யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு 99 தசம் 45 வீத பணம் வேலைத்திட்டங்களில் செலவுசெய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொர்பாக இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக மூவாயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்து கல்வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அமைக்கப்பட்ட வீடுகளில் நெடுந்தீவிற்கு 50 வீடுகளும், வேலணைக்கு 84 வீடுகளும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு 101 வீடுகளும், காரைநகர் மக்களுக்கு 76 வீடுகளுடன் யாழ்ப்பாண பிரதேச மக்களுக்கு 206 வீடுகளும், 103 வீடுகள் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு 147 வீடுகளும், சங்கானைக்கு 107 வீடுகளும், உடுவில் பிரதேச செயலக மக்களுக்கு 157 வீடுகளும், தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு 840 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 305 வீடுகள் கோப்பாய் பிரதேச செயலக மக்களுக்கும், சாவகச்சேரிக்கு 308 வீடுகளும், கரவெட்டி பிரதேச செயலக மக்களுக்கு 211 வீடுகளும், 133 வீடுகள் பருத்தித்துறை பிரதேச செயலத்திற்கும், 312 வீடுகள் மருதங்கேணிக்குமாக மொத்தமாக மூவாயிரத்து நூற்று நாற்பது வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்கள் பலாலி வடக்கில் மீள குடியமர்த்தப்பட்டு அன்ரனிபுர பகுதியில் 125 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களில் காணிகளை கொள்வனவு செய்த 610 மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு பிரதேச ரீதியாக தசம் 8 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டு 610 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசித்து வந்த மக்களுக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணியில் 100 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.