கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியர்கள் ஐந்து பேர், 50 ஆயிரம் ரூபா சரீர பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் ஆஜரான நிலையிலேயே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் காணிக்குள் பிரவேசித்து கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் போராளியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த காணிக்குள் மீண்டும் பிரவேசிக்காதிருக்குமாறு தடையுத்தரவொன்று பிறப்பிக்க வேண்டும் என பொலிஸார் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எனினும், குற்றவியல் வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், அவ்வாறான தடையுத்தரவொன்றை பிறப்பிக்க முடியாது என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்க நேற்றைய தினம் சிலர் முயற்சித்த வேளையில் கரைச்சி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரின் தலையீட்டில் இந்த நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அத்துடன், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் ஐந்து முன்னாள் போராளியர்களுக்கு இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பொலிஸ் நிலையத்திற்கு சென்ற குறித்த ஐந்து பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்புரை விடுத்திருந்தனர்.
இதற்கமையவே குறித்த ஐந்து பேரும் தமது சட்டத்தரணிகளுடன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீதவான் ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.