எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்லவென தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
எழுக தமிழ் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம் என தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி நடாத்தவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய கட்டிடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.