ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை எதிர்வரும் ஏழாம் திகதி கைச்சாத்திடப்போவதில்லை எனவும் அன்று அங்கு வைபவம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை மாத்திரமே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், வேறு எவ்வித உடன்படிக்கைகளும் இதுவரையில் கைச்சாத்திடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதனூடாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்பட்டமையானது வரவேற்கத்தக்கது எனவும் நாட்டின் அபிவிருத்திக்கு அது அவசியமாகும் எனவும் கூறிய அமைச்சர் அங்கு அமையப்பெற்றுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினூடாக ஏராளமான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.
அமைக்கப்படவுள்ள தொழில்பேட்டைகள் மூலம் ஏராளமான தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் எனினும் சில தரப்பு தவறான கருத்துகளை முன்வைத்து பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.