ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வில்பத்து விவகாரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கலந்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
வில்பத்து விவகாரம் உட்பட முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக பேசித் தீர்க்க ஜனாதிபதி, பிரதமர் இருவரையும் தாமதமின்றி சந்தித்துப் பேச விரும்புவதாகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியும், பிரதமரும் அரசாங்கமும் இது விடயத்தில் அவசரம் காட்டாமல் தாமதப் போக்கை கடைப்பிடித்தால் நிலைமை மோசமடையுமெனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது விட்டால் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்.எச்.எம்.நவவி, மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாட் நிஸாம்டீன், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அஷாத் சாலி, ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.