ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான
முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ அல்லது நிறுவனத்துடனோ அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
அவ்வாறு உடன்படிக்கை எதனையும் செய்வதாயின், குறித்த உடன்படிக்கையின் ஆரம்ப நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட பின்னர் அது சட்ட மாஅதிபர், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.
தன்மீது நம்பிக்கை வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பிரதான சேவகனாக நாட்டு மக்கள் தன்னை தெரிவு செய்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென்றும் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடனும் அர்ப்பணிப்புடனும் அரசாங்கம் முன்னேறிச் செல்லும் போது பல விமர்சனங்களை முன்வைத்து சிலர் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சியெடுப்பதாகவும் 2020 ஆண்டில் மக்களின் விருப்பத்தினாலன்றி சட்டவிரோதமாகவோ, அரசியலமைப்புக்கு விரோதமாகவோ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எந்த கட்சியாவது ஆட்சியதிகாரத்துக்கு வரும்போது, அந்த அரசாங்கம் சுதந்திரமாக தனது கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிப்பது நாட்டை நேசிக்கும் அனைவரினதும் பொறுப்பாகும் என்பதுடன் அதிகார பேராசை மற்றும் குறுகிய அரசியல் தேவைகளுக்காக செயற்படுவதற்கு இன்னொரு தடவை வாய்ப்பில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2017 புதிய ஆண்டில் உண்மைக்குப்பறம்பான பிரச்சாரங்கள் செய்வதனை விடுத்து, நியாயமான விமர்சனங்களை முன்வைத்து நாட்டுக்கும் மக்களுக்குமாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொள்ளுமாறு அனைவரிமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.